Thursday, August 13, 2015

கஞ்சத்தனமாக இருப்பது ஆரோக்கியமான பழக்கமா..!?!?


இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்வில் தினந்தோறும் எத்தனையோ வகையான மனிதர்களை சந்திக்கிறோம். பார்க்கிறோம்..பழகுகிறோம். அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான குணங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்துடன் ஏதாவது ஒரு பலகீனமான பழக்கம் ஒன்றும் நிச்சயமாக இருக்கும். அதில் மிக மோசமான பழக்கமாக மக்கள்மத்தியில், மரியாதைக் குறைவை ஏற்ப்படுத்தி ஏளனமாக பேசப்படும் பழக்கமாக இருப்பதுதான் இந்தக் கஞ்சத்தனமாகும்.

கஞ்சத்தனம் என்றால் தாம் எல்லாவகையிலும் ஓரளவு வசதிவாய்ப்பை பெற்றிருந்தும் நிம்மதியாக வாழ்நாளைக் கழிக்க போதிய பணம், பொருள், செல்வம்  நிலபுலன்கள் இருந்தும். அதைக் கொண்டு தானும் நல்லபடியாக அனுபவித்து வாழாமல் பிறருக்கும் எவ்வித உதவியும் பயனும் இல்லாமல் பெயரளவுக்கு பெரும்பணக்காரர் என பெயரைத்தாங்கிக் கொண்டு  எல்லாவற்றிலும் கஞ்சத்தனத்தை காண்பித்து கருமித்தனமாக தேவைக்குக் கூட செலவு செய்ய யோசிக்கும் பழக்கம் உள்ளவர்களாக வெத்துவேட்டாக யாருக்கும் எவ்வித பிரயோஜனமும் இல்லாமல் வாழும் மனித வர்க்கமாகும். இப்படிப்பட்டவர்களையே கஞ்சனாக சமுதாய மக்கள் சித்தரித்துப் பேசுவார்கள்..பெரும்பாலும் நாம்வசிக்கும் பகுதிகளில் நிச்சயமாக இப்படிப்பட்ட மனிதர்களை பார்த்திருப்போம்.

ஏழையானாலும் பணக்காரர்களானாலும் தாராள மனமில்லாமல் தனக்கும் புண்ணியப்படாமல் பிறருக்கும் புண்ணியப்படாமல் கடைந்தெடுத்த கருமியாக  இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கஞ்சனே ஆவார்கள். ஆனால் இதில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கஞ்சனாக இருந்தாலும் அவர்களின் பொருளாதார சூழ்நிலைகளை முன்னிட்டு யாரும் விமரிசித்து பேசுவதில்லை.

அதேசமயம் சிலர் சிக்கனவாதிகளாகவும், கணக்குப் பார்த்து செலவு செய்யக் கூடியவர்களாகவும் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் செலவு செய்பவர்களாகவும் வீண்விரயம் செய்யாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை கஞ்சர்களின் பட்டியலில் சேர்த்துப் பேச முடியாது. காரணம் அவர்களது வருமானம் வசதிவாய்ப்பை பொறுத்து அப்படி நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

இதில் வருத்தப் படக் கூடிய விஷயம் என்னவென்றால் ஏழை நடுத்தரமக்களுக்கு இருக்கும் கொடுத்துதவும் தாராள மனட்பான்மை கூட சில பெரும்செல்வந்தர்களுக்கு இருப்பதில்லை. மேற்கொண்டு சேமிக்கவே முயற்ச்சிக்கிறார்கள்..

அதாவது ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்று ஒருபழமொழி சொல்வார்கள்.அதுபோல அனாவிசயமாக செலவழித்தல் தேவையில்லாமல் பொருளாதாரத்தை சீரழித்தல் நல்ல பழக்கம் அல்ல. அதே சமயம் தேவைக்கு செலவுசெய்வதும் இல்லாதோர்க்கு கொடுத்து உதவுவதும் தாராள மனப்பான்மையும் சிறந்த பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஆகையபடியால் செல்வச்சீமானாக இறைவன் அளித்துள்ள இந்த  பணக்கார பாக்கியத்தை பிரோஜனமாக நாலுபேருக்கு பயன்படும்படி  நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.  இயன்றவரை உதவிகள் செய்து  நன்மதிப்பை ஏற்ப்படுத்திக் கொள்வதுடன்  ஈருலக வெற்றியை அடைய வழிவகுத்து சமுதாயத்தார் கஞ்சன்,கருமி  என்ற முத்திரையை பதிக்காமல் கனிந்த மனம் கொண்ட கொடையாளன் என்ற  முத்திரையை பதிக்க நம்மை ஆக்கிக் கொள்ளவேண்டும். 

எனவே நிலையில்லாத இவ்வுலகவாழ்க்கை யாருக்கும் நிரந்தரமில்லை. நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது நாம் கஷ்டப்பட்டு சேமித்த எந்த பொருளும் பணமும் சொத்தும் செல்வமும் ஒருபோதும் கூட வரப்போவதில்லை.அதேசமயம் நாம் செய்த தர்மமும் உதவியும் நற்காரியங்களும் இறைவணக்கமும் தான் நமக்கு இறைவனது சந்நிதானத்தில் கூட வந்து நிற்க்கும். இதனை செல்வந்தர்களாக இருந்துகொண்டு கஞ்சனாக இருக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்தாலே பல ஏழைமக்கள் பயன்பெருவதுடன் பலரது பாராட்டையும் அன்பையும் மரியாதையையும் பெறுவதுடன் சமுதாயத்தாரால் போற்றப்படும் நல்ல மனிதர்களாக அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்களின் நற்ப்பெயர் மறையாது மக்கள் மனதில் .என்றென்றும் நிலைத்து நிற்ப்பவர்களாக இருப்பார்கள்..!!!


அதிரை மெய்சா



2 comments:

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.