Monday, March 5, 2018

யார் ஏழை .!?

ஓலைக் குடிசையாயினும்
உனதென்று சொந்தமாய்
ஒருவேளைக் கஞ்சி குடித்து
நிம்மதிப் பெருமூச்சில் 
நெஞ்சு நிமிர்த்தி நடக்கும்
நீயா ஏழை


வேங்கையாய் வெகுண்டெழுந்து
வீதி வீதியாய் அலைந்து திரிந்து
கிடைத்த வேலையை
கடவுளாய் மதித்துச் செய்யும்
நீயா ஏழை

உடலை உழைப்பிற்குக் கொடுத்து
உணர்வை உறவிற்குக் கொடுத்து
ஊனமில்லா உனது வாழ்வில் 
உற்சாகமாய் என்றும் திகழும்
நீயா ஏழை

ஏழை யாரெனில்

கோடிகோடியாய்ப் பணமிருந்தும்
மாடமாளிகை ஆயிரமிருந்தும்
கொஞ்ச நேரம் கண்ணயர
கொஞ்ச உணவு தான் உண்ண
கெஞ்சி நிற்பர் மருத்துவரை
அவர்தான் ஏழை

ஊராரைக் கொள்ளையடித்து
உல்லாசமாய் வாழ நினைத்து
ஊரிழந்து உறவிழந்து
உலகமே காரியுமிழ்ந்து
நடைபிணமாய் வாழ்பவரே
ஏழை

ஆட்சியாலும் அதிகாரத்தாலும்
அகந்தையுடன் நடந்து விட்டு
மாற்றம் வந்து மனம் திருந்தி
வருந்தி வருந்தி நோகுபவர்களே
ஏழை

ஏழையென்று ஏளனச்சொல் 
ஏதுமில்லை இவ்வுலகில்
பரந்தமனம் படைத்த நல்லோர்
பாரினிலே பணக்காரர் ஆவார்


                                                            அதிரை மெய்சா
     
 
 


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.