Monday, April 16, 2018

யார் அந்தத் தீவிரவாதி.!?

இயல்பாகவே தீவிரவாதி என்கிற சொல்லைக் கேட்டாலே நமக்கு ஒருவித அச்சமும்,அதிர்ச்சியும் மனதில் ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த சொல் ஒரு பயங்கர குற்றம் செய்பவர்கள் போன்று நம் எண்ணங்களில் ஆழமாக பதிந்து விட்டது. அதுவும் இப்போதைய காலகட்டத்தில் இந்த சொல்லை நாம் அடிக்கடி பத்திரிகைச் செய்திகளிலும்,காணொளிச் செய்திகளிலும் சமூக வலைதளச் செய்திகளிலும் காணமுடிகிறது.


தீவிரம் என்பதன் பொருள் ஒரு விஷயத்தில் அதிகமாக அக்கறை செலுத்துவது ஆர்வம் கொள்வது ரொம்பவும் ஈடுபாட்டுடன் செயல்படுவது  இப்படியான பல அர்த்தங்களை கொண்டதாகும். உலக நடைமுறை விஷயங்கள் ஒவ்வொன்றிலும் நாம் தீவிரம் என்ற சொல்லை காணலாம். உதாரணத்திற்க்கு தீவிர சிகிச்சை பிரிவு,தீவிர விசாரணை,தீவிர நம்பிக்கை,தீவிர நடவடிக்கை,தீவிர கண்காணிப்பு, இப்படி எத்தனையோ அன்றாடம் அவசியமாக உபயோகப்படும் வார்த்தைகளோடு கலந்து இந்த தீவிரம் என்ற சொல் பின்னிப்பிணைந்து இருக்கிறது.

இன்னும்  சொல்லப்போனால் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு விஷயத்தில் தீவிரவாதியாகத்தான் இருப்பான்.அவனுக்குள் இருக்கும் ஏதாவது பழக்கவழக்கங்களிலோ,செயல்பாட்டிலோ,விருப்பமான உணவிலோ, காரியங்களிலோ தீவிரம் காட்டுபவனாக இருப்பான். இப்படி தீவிரம் காட்டுபவர்களை யாரும் தீவிரவாதிகள் என்று அழைப்பதில்லை.

அப்படியென்றால் மக்கள் பயந்து பீதியடையும் தீவிரவாதி என்ற கடுஞ்சொல் யாரைப் பார்த்து சொல்லப்படுகிறது.?

யார் அந்தத் தீவிரவாதி.?

மனிதாபிமானமில்லாமல் முரட்டு சிந்தனைக்கு தீவிரமாக  அடிமைப்பட்டு மக்களுக்கு பாதிப்பு உண்டு பண்ணுபவர்கள், ஈவிரக்கமின்றி வன்செயல், கொடுஞ்செயல் புரிபவர்கள், மனதை கல்லாக்கிக்  கொண்டு கொடூரக் கொலைப் பாதகச் செயல் செய்யத் துணிந்தவர்கள். தேசத்திற்கும் தேச மக்களுக்கும் எப்போதும் அச்சுறுத்தலாய் இருப்பவர்கள், இவர்களே அந்தத் தீவிரவாதிகளாவார்கள்.

எனவே நல்ல விஷயங்களில் தீவிரம் காட்டாமல் தீய விஷயங்களில் அதிகம் தீவிரம் காட்டுவதால் தீவிரவாதி என்ற சொல் இத்தனை வலிமை பெற்று பயங்கரமான சொல்லாக மக்கள் மனதில் பதிந்து விட்டது.

இப்படியான தீயவழித் தீவிரவாதம் எல்லோர் மனதிலிருந்து களையப்பட்டு நல்ல செயலுக்காகவும், நல்ல நோக்கத்திற்காகவும், நன்மை தரும் விசயத்திற்காகவும் இவ்வுலக மக்களும்,இவ்வுலகை  ஆளும் ஆட்சியாளர்களும் தீவிரமாக இருந்தால் தீவிரவாதி என்ற சொல்லை நம் செவிகள் கேட்கும்போது அச்சமின்றி ஆனந்தம் அடையும்.

                                                               அதிரை மெய்சா
                                            

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.